search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லுக்கான மத்திய அரசின் விலை"

    நெல்லுக்கான மத்திய அரசின் விலை டெல்டா விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொது செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன் கூறினார்.
    மன்னார்குடி:

    தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொது செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பா.ஜனதா தேர்தல் அறிக்கையிலும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களும் 2022-ம் ஆண்டுகளுக்கு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் நெல்லுக்கான விலை குறித்த மத்திய அரசின் அறிவிப்பினை பார்த்தால் 2032 ஆனாலும் விவசாயிகளின் வருமானம் கேள்விக்குறியாகவே இருக்கும்.

    பிரதமர் மோடி ‘மன்கி பாத்தில்’ ஒன்று பேசுகிறார். ஆனால் வெளியே அதற்கு நேரெதிராக பேசுகிறார். மத்திய அரசு தற்போது நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ரூ.1750 மற்றும் ரூ.1770 என்று நிர்ணயம் செய்துள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு போதுமானதாக இருக்காது. எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியது போல், உற்பத்தி செலவில் 50 சதவீதத்தை உயர்த்தி தர வேண்டும். கோதுமைக்கு கொடுக்கிற ஆதார விலை நெல்லுக்கு இல்லை.



    கோதுமையை அறுவடை செய்து நேரடியாக பயன்படுத்தலாம். ஆனால் நெல்லின் நிலை அதுவல்ல. டெல்டா பகுதியில் நெல் மட்டுமே முக்கிய பயிராக உள்ளது. எனவே மத்திய அரசு நெல்லுக்கு சிறப்பு விலை வழங்க வேண்டும். இதன்படி, நெல்லுக்கான அடிப்படை விலை அறிவிப்பினை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 என்று நிர்ணயிக்க வேண்டும். இது நடக்காவிட்டால் விவசாயிகள் நிலை நிச்சயம் கேள்விக்குறியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×